Saturday, July 15, 2006

தமிழ் பின்னனி பாடக/பாடகியர்களின் தொகுப்பு


கடந்த சில வாரங்களாக Airtel Super Singer நிகழ்ச்சியை விஜய் டிவியில் தொடர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அமெரிக்காவில் சில மாதங்களூக்கு முன் Fox TV யில் American Idol என்ற சிறந்த பாடகர் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது,கிட்டதட்ட அதை தழுவி இங்கு இந்த நிகழ்ச்சி எடுக்கபட்டிருக்கிறது.உண்மையில் மெகா சீரியல்களின் அட்டாகசங்களுக்கு மத்தியில் இது ஒரு ஆறுதலான நிகழ்ச்சி.

வியக்கவைக்கும் வகையில் குரல் வளத்தோடு பாடும் இந்த புது முகங்களை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.அதே சமயம் இவர்களூம் இன்றை பின்னனி பாடக பாடகியரின் பெரும் கூட்டத்தில் முகம் தெரியாதவர்களாக மாறிவிடுவார்கள் என்ற வருத்தமும் ஏற்பட்டது.

இளையராஜா மிக பிரபலமாக இசை அமைத்து கொண்டிருந்த காலத்தில் விரல் விட்டும் எண்ணும் அளவுக்கு தான் பாடகர்கள் இருந்தார்கள்.A.R.ரஹ்மான் புண்ணியத்தால் இன்று தினம் ஒரு புது குரல் திரைபிரவேசம் செய்யும் அளவுக்கு பின்னனி பாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த பெரும் கூட்டத்தில் நாம் அடிக்கடி கேட்டு ரசிக்கும் சில பாடல்கள் கூட யார் பாடினார்கள் என்று தெரிந்தாருக்காது அல்லது தெரிந்திருந்தாலும் அவர்களை பார்த்திருக்கமாட்டோம்.இதற்கு மாற்றாக நாம் ஏன் தமிழில் பாடும் அனைத்து பின்னனி பாடகர்களை அவர்களது புகைபடங்களோடு சேகரித்து ஒரு பதிவு போட கூடாது என்று நினைத்தேன்.

ஆனால் சோம்பல் யாரை விட்டது,சரி எதற்கும் Google ல் ஒரு தேடு தேடி பார்த்து விட்டு பிறகு வேலையை ஆரமிக்கலாம் என்று பார்த்தால்,உனக்கு ஏனடா இந்த வேலை என்று ஒரு நண்பர் நான் செய்ய நினைத்த அனைத்தையும் முன்னமே முடித்து வைத்துள்ளார்,இங்கு சென்று பாருங்கள் நீங்கள் ரசித்த பாடகர்களின் முகங்களையும் அவர்களது பிரபல பாடல்களையும்.

Wednesday, July 12, 2006

கண்ணை கவரும் கைலாசநாதர் ஆலயம்

பல்லவ பேரரசர்களின் கலை ஆர்வம் உலகமறிந்தது.அந்த வரிசையில் தன் பாட்டனார்களான மகேந்திரவர்மனையும்,நரசிம்மவர்மனையும் கலைத்துறையில் மித மிஞ்சியவன் ராஜசிம்மன் என்கிற இராண்டாம் நரசிம்மவர்மன் என்று சொன்னால் மிகையாகாது.

ராஜசிம்மன் ஆட்சி காலத்தில் பல்லவ சிற்பத்துறை சிகரத்தை தொட்டது,அந்த வகையில் அந்த மாமன்னனின் பெயரை சொல்லும் பல கோவில்களில் காஞ்சி கைலாசநாதர் கோவிலும்,மாமல்லபுரம் கடற்கரை கோவிலும் இன்றும் ராஜசிம்மனின் கலையார்வத்தை பறைசாற்றி கொண்டிருக்கிறன.மாமல்லபுரத்தில் உள்ள மற்றைய குடைவரை சிற்பங்களும் கோவில்களும் கூட ராஜசிம்மனாலேயே கட்டபட்டிருக்கும் என்று முனைவர் நாகசாமி அவர்கள் தனது ஒரு ஆய்வுகட்டுரையில் விளக்குகிறார்.

இவ்வாறு புகழ் பெற்ற காஞ்சி கோவில்களின் இன்றைய நிலைமை என்ன என்று காண்போம்,. கைலாசநாதர் கோவில் இந்திய தொல்லியல் துறையினரால் நன்றாகவே பாராமரிக்கபடுகிறது.கோவில் முழுநேர வழிபாட்டிற்கு திறந்து விடபடுவதில்லை என்று நினைக்கிறேன்.அதுவே ஒருவகையில் கோவிலை தூய்மையாகவும் அமைதியாகவும் வைத்திருப்பதற்கு உதவுகிறது.நாங்கள் கோவிலிற்கு சென்ற நேரம் ஒரு சனிகிழமை மதியம் சுமார் மூன்று மணி இருக்கும்,கோவிலில் எங்களை தவிர ஒரு வெளிநாட்டினரும் இந்திய தொல்லியல் துறையை சேர்ந்த ஒரு பாதுகாவலர்/கைடு மற்றுமே இருந்தனர். அமைதியாக கோவிலின் சிற்பங்களை சுற்றி பார்க்கவும் புகைபடம் எடுக்கவும் வசதியாக இருந்தது.

காஞ்சியில் உள்ள கோவில்களிலேயே அதிகமாக உருவிழந்து காணப்படுவது கைலாசநாதர் கோவிலாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.தொல்பொருள் துறை கோவிலின் ஒரு பகுதியில் உள்ள சிற்பங்களை புதுபித்து மிக அழகாக மாற்றியிருக்கிறார்கள் மற்ற பகுதிகள் ஏனோ தெரியவில்லை இன்னும் புதுபிக்கபடவில்லை. மற்ற பல்லவர்கால கோவில்களை போல் அல்லாது இது சுண்ணாம்பு மற்றும் கருங்கற்கள் கொண்டு கட்டபட்டுள்ளது.அனேகமாக அனைத்து சிற்ப்பங்களும் சுண்ணாம்பு மற்றும் களிமண்ணால் செய்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன்(உறுதியாக தெரியவில்லை).பல சிற்பங்கள் காலத்தின் பிடியில் சிக்கி சிதைந்து போயிருக்கின்றன.

ஒவ்வொரு குட்டி கோவிலுக்குள்ளும் ஒரு புராண காட்சியை சிற்பமாக வடிவமைத்திருக்கிறார்,பல்லவ பேரரசர் ராஜசிம்மன்.இவரது கலையார்வத்தில் இவரது மனைவி ரங்பதா தேவி அவர்களுக்கும் பெரும் பங்கு இருந்திருப்பதாக பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி தனது South Indian History எனும் நூலில் கூறுகிறார்.மேலும் ராஜசிம்மனின் கலையார்வம் பற்றி சுவைபட அறிய வேண்டுமானால் சாண்டில்யனின் ராஜதிலகம் படித்துபாருங்கள்.

சரி வாருங்கள் இப்பொழுது கோவிலை பார்ப்போம்



உருகுலைந்த நிலையில் இருக்கும் சிற்பம்.இதே மாதிரி ஒரு சிற்பத்தை மகாபலிபுரத்தில் பார்த்த மாதிரி ஞாபகம்.


புதுபிக்கபட்டு கொண்டிருக்கும் கோவிலின் கோபுரம்.


கோவிலின் உள்ளே உள்ள புதுபிக்கபட்ட சிவன் சிற்பம்


புதுபிக்கபட்ட மற்றுமொரு குட்டி கோபுரம்





கைலாசநாதர் கோவிலின் சிறப்பம்சமே இந்த குட்டிகோவில்கள் தான்.






Friday, July 07, 2006

விபத்திற்கு வித்திடும் ரயில் பெட்டி

இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு சொந்த வேலையாக காரைகுடிக்கு பயணபடுவதற்காக சென்னை -இராமேஸ்வரம் விரைவு ரயிலில் நாங்கள் ஏறிய பெட்டியின் மின்விளக்கு பட்டனின் நிலை இது.இதில் இன்னும் ஒரு வேதனையென்னவென்றால் நாங்கள் திரும்பி வரும் போது ஏறிய பெட்டியிலும் இதே நிலமைதான் காணப்பட்டது.ஒரு வேளை நாங்கள் வந்த அதே பெட்டியாக இருக்குமே என்று துருவி ஆரய்ந்ததில்,இல்லை என்று உறுதியாயிற்று.

டெல்லியில் இருந்து செல்லும் ரயில்களில் அடிக்கடி திடீர் சோதனை நடத்தும் லல்லு இந்த பக்கமும் கொஞ்சம் எட்டிபார்த்தால் நன்றாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை.


Friday, June 09, 2006

வெறுக்க வைக்கும் blogger...


கடந்த இரண்டு வாரங்களாக blogger உடன் பெரும் போராட்டமாக உள்ளது.அவ்வப்பொழுது Load அவதற்கே மிக நேரமாகிறது.அதைவிட பெரும் இம்சையான ஒரு விஷயம், படத்தை உள் ஏற்ற முடிகிறது ஆனால் அது பதிவில் சேரமாட்டங்கிறது.

இந்த பிரச்சினை Googleக்கு நன்றாக தெரிந்தும் கூட Google இதை சரி செய்ய ஒரு வாரம் எடுத்து கொண்டது.பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்ட பிறகு வழக்கமாக அதை தெரியபடுத்தும் Google,இந்த முறை அதை செய்ததாக தெரியவில்லை.

இவ்வளவு நடந்த பிறகும் Google,பெரிதாக blogger பிரச்சினைக்கு மொத்தமாக தீர்வு காண முயல்வதாக தெரியவில்லை.மீண்டும் இன்று அதே பழைய படம் உள் ஏற்ற முடியாத பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது.They are very much competitive enough to handle and solve this problem in quick time but somehow they don't seem to be interested

ஒருவகையில் Google,blogger மீதான தனது அக்கறையை குறைத்து கொண்டு மற்ற புது வெளியீடுகளில் திருப்ப தொடங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது.அவ்வாறாக இருப்பின்அது சரியான முடிவாக தெரியவில்லை.

Thursday, June 08, 2006

மகாபலிபுரம் சுனாமி சிற்ப சின்னங்கள்

சுனாமி சோகம் நடந்த பொழுது சென்னையில் இல்லாத காரணத்தால் அதன் கோரத்தையும் அதே நேரம் அது தேடி தந்த நமது கலை பொக்கிஷத்தையும் உடனடியாக காண வாய்ப்பு கிடைக்கவில்லை.
சுனாமி அலைகள் பின்வாங்கிய பிறகு மகாபலிபுர கடற்கரையில் தோன்றிய இரண்டு சிற்ப கோவில்களை பற்றி செய்திதாள்களிலும் வலைதளங்களிலும் மூலமாக தெரிந்து கொள்ள நேர்ந்தது.அதன் புகைபடங்களை நான் தேடிய வகையில் எனக்கு ஒரே மாதிரியான இரண்டு புகைபடங்களே அனைத்து செய்திதளங்களிலும்,வலை பூக்களிலும் கிடைத்தது.
ஆனால் நான் சென்னை திரும்பிய பிறகு நேரில் சென்று பார்த்த பொழுது எனக்கு புகைபடங்களில் பார்த்தவை அவ்வளவு திருப்திகரமாக இல்லை.முதலில் எந்த புகைபடங்களிலும் கடற்கரை கோவிலையையும் புதிதாக தோன்றிய சிற்பங்களையும் ஒன்றாக தெரியுமரான படங்கள் என் கண்ணுக்கு படவில்லை.

ஆகையால் இந்த பதிவு என்னை போல் சரியாக கண்டு மகிழ முடியாத நமது வெளிநாடு வாழ் நண்பர்களுக்காவும்,உள் நாட்டிலேயே இருந்து பார்க்க முடியாத நண்பர்களுக்காகவும் சமர்பிக்கபடுகிறது.

புது சிற்பங்களும்,தூரத்தில் கடற்கரை கோவிலும்.

ஐந்து தலை நாக வடிவில் உள்ள குட்டி கோவில்




தொல்பொருள் துறையினறால் கட்டம் கட்டப்பட்டுள்ள சுனாமிக்கு பின் சிற்பங்கள்

Wednesday, June 07, 2006

இந்திய தொல்பொருள் துறைக்கு- ஒரு "ஒ" போடுங்க !!!

கடந்த வாரம்,வார விடுமுறையில் எனது இரண்டு சக்கரவாகனத்தில் ஏறி மகாபலிபுரம் சாலையில் ஒரு ரவுண்ட் அடிக்கலாம் என்று கேமராவை தூக்கி கொண்டு கிளம்பிய நான் கடைசியில் மகாபலிபுரத்திற்கே சென்று விட,சரி,இவ்வளவு தூரம் வந்தாயிற்று ஒரு எட்டு ராஜசிம்மரின் கடற்கரை கோவிலை கண்டு செல்லாலாம் என்று அனுமதி சீட்டு வாங்கி உள் நுழைந்தேன்.

உள்நுழைந்த எனக்கு வியப்பு காத்திருந்தது.இரண்டாண்டுகளுக்கு முன் வந்த பொழுது இருந்ததற்கும்,இப்பவும் நிறைய வேறுபாடுகள் தென்பட்டன.
நுழைவு சீட்டு வாங்கும் இடத்திலிருந்து தொடங்கி தடுப்பு சுவர்(ஒரத்தில் அமைந்திருக்கும் கடைகளை ஒட்டி) எழுப்பபட்டுள்ளது.உள்ளே மக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கபட்டுள்ளது.கோவிலின் சுற்றுபுரம் முழுவதும் பசும் புற்களால் அழகுற காட்சியளிக்கின்றன.முதல் நுழைவாயிலிற்கு அருகிலும் இரண்டாம் நுழைவாயிலிற்கு அருகிலும் கோவிலை பற்றிய விவரங்கள் கல்வெட்டுகளாக,தொல்லியல் துறையினரால் அமைக்கபட்டுள்ளன.

தடுப்பு சுவரினால் அதிகம் பலன் பெற்றது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளாகதான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்,பிச்சைகாரர்கள் மற்றும் புகைபடம் விற்கும் நடைபாதை வியாபரிகளால் அவர்கள் அடைந்த தொல்லைக்கு ஒரு முடிவு ஏற்பட்டிருக்கிறது.அவர்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் நமது கலை பொக்கிஷத்தை கண்டு செல்ல வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ள நமது இந்திய தொல்பொருள் துறைக்கு பாராட்டு தெரிவிக்க ஒவ்வொருவரும் கடமைபட்டுள்ளோம்.

கோவிலின் பின்புறம் சுனாமி மற்றும் கடல் காற்றினால் கோவிலிற்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க,கருங்கற்களை கொட்டி பெரும் தடுப்பு அரண் எழுப்பியுள்ளனர்.

சுமார் பதிநான்கு நுற்றாண்டுகளை தாண்டி இன்னமும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் ராஜசிம்ம பல்லவனின் கனவு சின்னம்,அதன் வயதின் மூப்பை ஆங்காங்கே வெளிபடுத்தி கொண்டுதான் இருக்கிறது.கிட்டதிட்ட கோவிலின் சுவற்றில் அமைந்துள்ள சிற்பங்களில் முக்கால் வாசி உப்பு காற்றிற்கு இரையாகி அதன் நிஜ உருவை இழந்திருக்கின்றன.

தொல்பொருள் துறையின் அரிய முயற்சியால் கோவில் சிற்பங்கள் முழுவதும் காகிதகூழ் கலைவையால் சுத்தம் செய்யபட்டு,பளீர் என்று காட்சியளிக்கின்றன.இந்த அரிய கலைசின்னத்தை அழகுபடுத்தி,காத்து வரும் தொல்லியல் துறைக்கு நாம அனைவரும் சேர்ந்து ஒரு ஓ போட்டே ஆக வேண்டும்.


உருகுலைந்த சிற்பங்கள்....

அழகின் மொத்த உருவமாய் நிற்கும் மகாபலிபுரம் கடற்கரை கோவில்
கோவிலின் பின் புறத்தில் கருங்கல் அரண்..




புதிதாக அமைக்கபட்டுள்ள நடைபாதை

Wednesday, May 31, 2006

சிப்காட் தொழில்நுட்பபூங்கா,சிறுசேரி - சென்னை.


பழைய மகாபலிபுரம் சாலையில் திருபோருர் செல்லும் வழியில் சிறுசேரி தொழில்நுட்ப பூங்கா கண்ணில் பட்டது,இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை சென்று பார்த்த ஞாபகம்,சரி என்று உள் நுழைந்தேன்.இரண்டாண்டுகளுக்கு முன் நன்றாக இருந்த சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக ஆகிவிட்டிருந்தது,Xansa building ஐ தாண்டியதும் TCSன் இடத்தில் கட்டுமாண வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

அதே சாலையில் கடைசி திருப்பத்தில் மேலும் ஒரு TCS site ல் கட்டுமான வேலைகள் ஞாயிற்று கிழமையில் கூட மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.இந்த பகுதியில் வர இருக்கும் மென்பொருள் உற்பத்தி நிலையங்களில் TCS site தான் மிக பெரிதாக தெரிகிறது.TCS site க்கிற்கு எதிரில் Mathematical Institue என்ற பெயரில் கட்டி முடிக்கபட்டு ஒரு அலுவலகம் உள்ளது.

இன்னும் சற்று தூரத்தில் Cognizant Technology யின் இரண்டாவது விரிவாக்கம் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.மேலும் திரும்பிய இடமெல்லாம் அந்த பொட்டல் காட்டில் கான்கிரிட் கட்டிடங்கள் மிக வேகமாக எழும்பி கொண்டிருக்கின்றன.இன்னும் இரண்டாண்டுகளில்,மொத்த இடமும் கான்கீரிட் கட்டிடங்களும்,அதன் உள்ளே பணிபுரியும் இளைய தலைகளுமாக நிரம்பிவிடும் என்பதில் சந்தேகமில்லை.